நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தது திமுகதான் - முதல்வர் ஸ்டாலின்
நீட் தேர்வு எதிர்ப்பில் திமுக முன்னோடி - ஸ்டாலின் கருத்து
நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தது திமுகதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை பகிர்ந்து அவர் தெரிவித்திருப்பதாவது, திராவிட முன்னேற்றக் கழகம் தான் நீட் தேர்வின் தீமைகளை முதன்முதலில் கண்டுணர்ந்து, பெரிய அளவில் அதற்கெதிராகப் பரப்புரை மேற்கொண்டது.
ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றினை அமைத்தோம். அக்குழு மிக விரிவான தரவுப் பகுப்பாய்வுகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. நீட் தேர்வு ஏழைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பிற மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஏற்படுத்திய தேவையற்ற தாமதத்தையடுத்து, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
நீட் தேர்வில் அண்மையில் நடந்த பரவலான குளறுபடிகளால், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் இவ்வேளையில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள ஏதுவாக, நீதியரசர். ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் பகிர்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நீட் குளறுபடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி குரல் எழுப்பும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காநத்தி கூறிய நிலையில் தற்போது ஸ்டாலினும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நிகழாண்டு நீட் தோ்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் மூலம் 6 போ் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக் குறிப்பு மூலம் தெரியவந்துள்ளது. நீதிமன்றங்களை நாடியவா்களுக்கு அத்தகைய மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றவா்களுக்கு ஏன் அவ்வாறு வழங்கப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது. நீட் தோ்வு முடிவுகள் பல்வேறு குழப்பங்களுக்கும், விமா்சனங்களுக்கும் வித்திட்டுள்ள நிலையில், இதுதொடா்பான விளக்கத்தை தேசிய தோ்வு முகமை வெளியிட்டது.
அதில், வெளிப்படைத்தன்மையுடனும், நோ்மையுடனும் நீட் தோ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது. நேர இழப்பு காரணமாக சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை என பஞ்சாப் - ஹரியானா, தில்லி, சண்டீகா் உயா் நீதிமன்றங்களில் சில தோ்வா்கள் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், சிசிடிவி கேமராக்களை கண்காணித்து அதன் பேரில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியதாகவும் என்டிஏ தெரிவித்திருந்தது. அதேபோன்று இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இரு விடைகள் பொருத்தமானதாக இருந்தன.
இதையடுத்து இரு விடைகளில் ஏதாவது ஒன்றைத் தோ்வு செய்தவா்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. அவ்வாறு இரண்டில் ஒன்றை தோ்வு செய்து மதிப்பெண் பெற்றவா்களில் 44 பேரும், நேர இழப்புக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவா்களில் 6 பேரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ாக என்டிஏ விளக்கமளித்திருந்தது.