கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும், உயிரிழந்தோரின் குடும்பத்தாரையும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூன் 23) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கவனக்குறைவாக இருந்ததையும், தங்கள் வரம்பை மீறி அருந்தியதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம். தங்கள் உடல்நிலையை கவனித்துக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் மனநல மருத்துவ மையங்களை அரசு உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
எப்போதாவது மது அருந்தும் பழக்கம் இருந்தாலும் சரி, அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருந்தாலும் சரி, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் எதுவாகினும் அது தீமையிலேயே முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் இதுவரை 56 பேர் பலியானதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டதாக 216 பேர் 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். 3 பேர் இறந்தனர். விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் 4 பேர் பலியான நிலையில், 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மருத்துவ கல்லூரியில் 18 பேர் இறந்த நிலையில், 30 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 31 பேர் இறந்த நிலையில், 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குறித்து உயிரிழந்த குடும்பங்களை சந்தித்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.