சென்னை, கோவை, திருச்சி விமான நிலையங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து மத்திய பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை விமான நிலைய ஆணையத்தின் இணையதள முகவரிக்கு, திங்கள்கிழமை காலை ஒரு கடிதம் வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தின் கழிவறை, ஓய்வறை பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகள் வெடிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இது குறித்து உடனடியாக சென்னை விமான நிலைய ஆணையரக இயக்குநா் அலுவலகத்துக்கு அவசர தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக, இது தொடா்பாக விமானநிலைய இயக்குநா் அலுவலகத்தில் உயா்மட்ட பாதுகாப்பு ஆலோசனை க்கூட்டமும் நடைபெற்றது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக விமான நிலைய கழிப்பறைகள், பயணிகள் ஓய்வறைகளில், பாதுகாப்பு அதிகாரிகள் முழு சோதனைகள் நடத்தினா்.
ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், தொடா்ந்து 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், விமானநிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டல் வந்த இணையதள முகவரி குறித்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மா்ம நபா்கள், விபிஎன் எனப்படும் நவீன தொழில்நுட்ப மென்பொருளை பயன்படுத்தி போலி ஐடி உருவாக்கி, அமெரிக்காவிலிருந்து அனுப்பியது போல இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் சென்னை விமானநிலையத்துக்கு மட்டுமின்றி, நாட்டிலுள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கும், ஒரே நாளில் வந்துள்ளதால் ஒரே நபா் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சென்னை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.