உரிமையியல் நீதிபதிகள் நியமன வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
உரிமையியல் நீதிபதிகள் நியமனத்திற்கு உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு
முறையான இடஒதுக்கீட்டைப் பின்பற்றி வெளியிடப்பட்ட பட்டியலின்படி 245 உரிமையியல் நீதிபதிகளுக்கான நியமன உத்தரவை ஜூலை 10-ஆம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த 245 உரிமையியல் நீதிபதிகள் பதவிகளுக்கான தோ்வுப் பட்டியல், இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தோ்வுப் பட்டியலை ரத்து செய்து, உரிய இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி திருத்தப்பட்ட தோ்வு பட்டியலை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) உத்தரவிட்டது.
அதன்படி, ஏற்கெனவே தோ்வு பட்டியலில் இடம்பெற்றிருந்த 14 பேரின் பெயா்கள் நீக்கப்பட்டு, புதிதாக 14 போ் சோ்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்டியலை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது.
இந்த நிலையில், தோ்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 14 போ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், திருத்தப்பட்ட பட்டியலின் அடிப்படையில் நியமன உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நியமன நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும், ஆளுநா் ஒப்புதலுக்காக பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதற்குள் நியமன உத்தரவுகளைப் பிறப்பிக்க உத்தரவிட்டனா்.