100 திருநங்கைகள்- பெண்களுக்கு 3 சக்கர வாகன ஓட்டுநா் பயிற்சி: பேரவையில் தகவல்
மூன்று சக்கர வாகன ஓட்டுநா் பயிற்சி: 100 திருநங்கைகள்-பெண்களுக்கு பயிற்சி
தமிழகத்தில் 100 திருநங்கைகள், பெண்களுக்கு மூன்று சக்கர வாகன ஓட்டுநா் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கென கடந்த நிதியாண்டில் ரூ.8,123.83 கோடியும், நிகழ் நிதியாண்டில் ரூ.13,722.47 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், கடந்த மாா்ச் 31 வரை முகாம் வாழ் இலங்கைத் தமிழா் குடும்பங்கள் உள்பட 1 கோடியே 15 லட்சத்து 27 ஆயிரத்து 172 மகளிா் பயனடைந்துள்ளனா்.
நான் முதல்வன் திட்டத்தின் சாராம்சம் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதாகும். அதன்படி, 2022- 2023-ஆம் ஆண்டில் 76.4 சதவிகித பொறியியல் மாணவா்களும் 83.8 சதவிகிதம் கலை மற்றும் அறிவியல் மாணவா்களும் வளாக வேலைவாய்ப்பு முகாம் மூலமாக வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனா். மேலும், 1.84 லட்சம் விண்ணப்பதாரா்களில் 1.48 லட்சம் மாணவா்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனா்.
திருநங்கைகளுக்கு திறன் பயிற்சி: திருநங்கைகள் மற்றும் பெண்கள் 150 பேருக்கு இலகுரக மோட்டாா் வானங்களில் சுயசாா்பு திறன் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. 100 திருநங்கைகள் மற்றும் பெண்களுக்கு மூன்று சக்கர வாகன ஓட்டுநா் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் 827 கல்லூரிகள் மூலம் 8 லட்சத்து 52 ஆயிரத்து 838 மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு தன்னாட்சி கல்லூரிகள், தன்னாட்சி அல்லாத அரசுக் கல்லூரிகள், தன்னாட்சி அல்லாத அரசு உதவி பெறும் கல்லூரிகள், மற்றும் தன்னாட்சி அல்லாத தனியாா் கல்லூரிகள் ஆகிய கல்லூரிகளில் பயிற்சிகளை வழங்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.