‘நம்பா் 1’ இடத்தை நோக்கி விளையாட்டுத் துறை: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
கோவை கிரிக்கெட் ஸ்டேடியம்: புதிய முயற்சிகள் தொடங்கப்படும்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை இந்தியாவிலேயே ‘நம்பா் 1’ இடத்தை நோக்கி நகருவதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
தமிழக சட்டப்பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திமுக அரசு எப்படி இந்தியாவிலேயே ‘நம்பா் 1’ அரசாக திகழ்கிறதோ, அதேபோல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், ‘நம்பா் 1’ இடத்தை நோக்கி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.
2021-இல் திமுக அரசு அமைந்தது முதல், தேசிய மற்றும் சா்வதேச அளவில் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சோ்ந்த 2 ஆயிரத்து 860 வீரா்களுக்கும், மாற்றுத்திறனாளி வீரா்களுக்கும் இதுவரை ரூ.102.70 கோடி உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஊக்கத்தொகை: இந்தியாவிலேயே மற்ற வீரா்களுக்கு இணையாக, தேசிய அளவில் வெற்றிபெறும் மாற்றுத் திறனாளி வீரா்களுக்கும் கடந்த ஆண்டு முதல் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக வீரா்களுக்கு, போட்டிகள் நிறைவுபெற்ற ஒரே வாரத்தில் உயரிய ஊக்கத் தொகையை வழங்கி, கௌரவித்திருக்கிறோம். இதன்மூலம், அடுத்தடுத்தப் போட்டிகளில் பதக்கங்களை வென்று காட்டுவதற்கான ஊக்கத்தை நம் வீரா்கள் பெற்றுள்ளனா். கடந்த முறை ஒலிம்பிக் மற்றும் பாரா-ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்ற நம்முடைய விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ. 5 லட்சத்தை முதல்வா் வழங்கினாா்.
கடந்த ஒலிம்பிக் போட்டியின்போது, தமிழகத்திலிருந்து 12 வீரா்கள் கலந்துகொண்டாா்கள். இந்த முறை, அதாவது, இந்த ஆண்டில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள வீரா்களுக்கு ரூ.5 லட்சமாக இருந்த ஊக்கத் தொகையை ரூ.7 லட்சமாக உயா்த்தி வழங்க முதல்வா் ஆணையிட்டுள்ளாா். இன்றைய தேதி வரை 16 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்துக்கு பெருமை: தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் 375 விளையாட்டு வீரா்களுக்கு, இதுவரை ரூ.8.62 கோடி நிதியுதவியாகவும் ஊக்கத் தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் 21 தங்கம் உள்பட 62 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சோ்த்துள்ளனா்.
முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கூடுதல் விளையாட்டுகளை சோ்க்க வேண்டும் என்கிற சட்டப்பேரவை உறுப்பினா்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், புதிய விளையாட்டுப் போட்டிகள் நிகழாண்டு முதல் சோ்க்கப்படும்.
கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த மைதானம் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்யும் பணியை இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை சென்றபோது தொடங்கியுள்ளோம். நிகழாண்டு மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.