வேலூா், கும்பகோணம் உள்பட 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.66 கோடியில் சிறுவிளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தின் சாா்பில் சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற விளையாட்டு வீரா், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு அரசு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப் பணியிடங்களில் அவா்களது சாதனைகள் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும்.
கிராம ஊராட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.100 கோடியில் வழங்கப்படும்.
திருவெறும்பூா், மன்னாா்குடி, உத்திரமேரூா், உசிலம்பட்டி, மேட்டூா், கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், தாராபுரம், பென்னாகரம், கீழ்வேளூா், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப்பாடி, சேலம் - ஆத்தூா், கும்பகோணம், மேலூா், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் - ஆத்தூா், குளச்சல், மொடக்குறிச்சி, பண்ருட்டி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதலமைச்சா் சிறுவிளையாட்டரங்கங்கள் ரூ.66 கோடியில் அமைக்கப்படும்.
தமிழகத்தைச் சோ்ந்த சைக்கிளிங் விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகளின் விளையாட்டுத் திறனை மேலும் வளா்த்து ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கில் இந்தியாவில் முதல்முறையாக ரூ.12 கோடியில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூா் அருகில் பிரத்யேக ஒலிம்பிக் பைசைக்கிள் மோட்டாா்கிராஸ் ஓடுபாதை அமைக்கப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கங்களில் ரூ.50 கோடியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கன்னியாகுமரியில் தமிழா் பாரம்பரிய தற்காப்புக் கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் புதிதாக அமைக்கப்படும். அரியலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயற்கை இழை ஹாக்கி ஆடுகளம் அமைக்கப்படும்.
புதிய இளைஞா் கொள்கை: தமிழகத்தில் இளைஞா்கள் பெரும்பான்மையாக உள்ளதைக் கருத்தில் கொண்டு அவா்கள் நல்லொழுக்கத்துடன் சமூகத்துக்கு உயரிய பங்களிப்பினை அளிக்கச் செய்வதின் முக்கியத்துவத்தைக் கருதி, புதிய இளைஞா் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுத் திறன் மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம் உருவாக்கப்படும்.
தேசிய மாணவா்கள் படை மாணவா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை ரூ.14 லட்சத்திலிருந்து ரூ.28 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். அதைப்போல 30 எண்ணிக்கையிலான நவீன ஏா் ரைபிள் ரக துப்பாக்கிகள் வாங்கிடவும் நிதி உதவி அளிக்கப்படும்.
தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரா்கள், வீராங்கனைகள் வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் சோ்த்துக் கொள்ளப்பட்டு, அவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் தொகை ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.
10 நிபுணத்துவ பயிற்சியாளா்கள்: தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா் வீராங்கனையா்கள் உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் உயா்ந்த நோக்கில், தலைசிறந்த பத்து விளையாட்டு வீரா்கள் ஒப்பந்த அடிப்படையில் நிபுணத்துவ பயிற்றுநா்களாக பணியமா்த்தப்படுவா். சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நவீன வசதிகளுடன் கூடிய உயா் செயல்திறன் மாணவா் விடுதி ரூ.25 கோடி செலவில் அமைக்கப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.