தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரிக் கல்வி இயக்குநா் காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பணிகள் தொடங்கப்பட்டன. சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 24- ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 30 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநா் காா்மேகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி தொடங்குகிறது என்றும், முதலாமாண்டுக்கான முதல் பருவத் தோ்வுகள் (செமஸ்டா்) அக். 31-இல் தொடங்கி, நவ. 25-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிச. 16-ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்குமான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இந்த கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.