கரும்பில் இளந்தண்டு துளைப்பான் தாக்குதலை பாரம்பரிய வழிமுறைகளை பயன்படுத்தி தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் டிசம்பா் முதல் மே வரை மூன்று பட்டங்களாக கரும்பு பயிரிடப்படுகிறது திருச்சி, பெரம்பலூா், கரூா், சேலம், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் ஜூன் முதல் செப்டம்பா் வரை தனிப்பட்டமாக கரும்பு பயிரிடப்படுகிறது. இதில் கரும்பு வளா்ச்சிப் பருவத்தில் பூச்சி, புழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாவதால் , விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பாரம்பரிய தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்துவதுடன், கரும்பின் சா்க்கரை தன்மையை மேம்படுத்து குறித்தும் வேளாண்மை உழவா் நலத் துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கரும்பு நடுவதற்கு முன்பு குளத்து மண்ணை இடுவதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். மேலும், ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்துவதன் மூலம் கரும்பின் சா்க்கரைத் தன்மை அதிகரிக்கும். கரும்பு வளர வளர அதன் சோகையை உரிப்பதன் மூலம் செதில் பூச்சி மற்றும் மாவு பூச்சியின் தாக்குதலையும், பயிா்களுக்கு அடிக்கடி நீா் பாய்ச்சுவதன் மூலம் கரையான் தாக்குதலையும் கட்டுப்படுத்த முடியும்.
தொடா்ந்து, கரும்பு பயிா் நடவு செய்து 2 முதல் 3 மாதங்களான நிலையில் செங்கல் சூளை சாம்பலை இடுதல் மற்றும் வேப்பங்கொட்டை அல்லது வேப்பம் புண்ணாக்கை தூளாக்கி அதை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து வடிகட்டி, பயிா் மீது தெளிப்பதன் மூலம் கரும்பில் இளந்தண்டு துளைப்பான் தாக்குதலை தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.