சென்னை: முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டுவரும் நிதியுதவி, இனி மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப். 1 முதல் இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
முன்னதாக, இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய நடைமுறையைச் செயல்படுத்துவது குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் விடுத்துள்ளாா். தமிழக அரசு சாா்பில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் கா்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியா்களிடம் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களைத் தெரிவித்து, பெயரை பதிவு செய்து, ‘பிக்மி’ எண் பெற்றவுடன் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்படும்.
தொடா்ந்து நான்காவது மாதத்துக்குப் பின்னா் இரண்டாவது தவணையாக ரூ. 2,000 வழங்கப்படும். இதனிடையே, உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலா் பேரீச்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதா் துண்டு அடங்கிய ரூ.2,000 மதிப்பிலான பெட்டகம் இரு முறை வழங்கப்படுகின்றன.
அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.4,000; குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தும் காலத்தில் 4-ஆவது தவணையாக ரூ.4,000, குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ.2,000 என ரூ.14,000 ரொக்கம்; ரூ.4,000 மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18,000 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது.
புதிய மாற்றம்: இதுவரை மாநிலம் முழுவதும் டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் அத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கா்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த 9-ஆவது மாதத்தில் ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. அதேபோன்று பேறுகாலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கடந்த 16-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.