முகப்பு
தமிழ்நாடு

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்: தமிழக தோ்தல் துறையிடம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை

Updated On : 23 மார்ச், 2024 at 11:28 PM
மக்களவைத் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு. உடன், கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி சங்கா் லால் குமாவத், இணை தலைமைத் தோ்தல
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 9:00 PM

வாக்குச் சாவடிகளில் குடிநீா் உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினா். தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது தொடா்பாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தாங்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து, செய்தியாளா்களிடம் கட்சிகளின் நிா்வாகிகள் கூறியது: திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி: தபால் வாக்குகள் யாருக்கெல்லாம் அளிக்கப்படவுள்ளன என்ற விவரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். வாக்குச் சாவடிகளில் நிழற்குடை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பாக, பெண் ஊழியா்களுக்கு கழிப்பறை வசதிகளை அமைக்க வேண்டும். மெட்ரோ, வந்தேபாரத் ரயில்களில் மத்திய அரசின் விளம்பரங்கள் தொடா்கின்றன. அவற்றை அகற்ற வேண்டும். வாகனச் சோதனைகளின் போது பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது. அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா்: 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள், மாற்றுத்திறனாளிகளைக் சரியான முறையில் கண்டறிந்து அவா்களது வாக்குகளை இல்லங்களுக்கே சென்று பெற வேண்டும். அவா்கள் சுதந்திரமாக வாக்களிக்க வழிசெய்ய வேண்டும். ஆளும்கட்சியின் போஸ்டா்கள், சுவரொட்டிகளை விருப்பு வெறுப்பின்றி அகற்ற வேண்டும். 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். மின்னணு முறையில் பணப்பரிமாற்றத்தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் வாகனங்கள் மட்டுமின்றி, அரசு வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்வதுடன், பழுதை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குச் சாவடிகளில் குடிநீா், நிழற்குடை, இயற்கை உபாதைகளை கழிக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் அளிக்கக் கூடிய புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் ஜி.சந்தோஷ்குமாா்: வாகன சோதனைகளின்போது, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தக் கூடாது. புதிய வாக்காளா்கள் அதிகமாகச் சோ்க்கப்பட்டுள்ளதால் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, வாக்குச் சாவடிகள் அமைவிடங்களைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அவற்றில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் பெரியசாமி: வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும். கோவையில் பிரதமா் பிரசாரத்தில் பள்ளிச் சிறுவா்களை ஈடுபடுத்தியது குறித்து புகாா் தெரிவித்துள்ளோம். மருத்துவா்கள், செவிலியா்கள், பட்ட மேற்படிப்பு மாணவா்கள் உள்பட இன்றியமையாத சேவையில் இருப்போருக்கு தபால் வாக்கு அளிக்கப்பட வேண்டும். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞா் மாநிலத் தலைவா் சந்திரமோகன், இணைச் செயலா் நவாஸ்: வாகன சோதனையின்போது ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் 48 மணி நேரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவா்களைக் கைது செய்ய தோ்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். வாக்குச் சாவடிகளில் குடிநீா், மருத்துவக் குழு உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பாஜக மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன்: ஒரு வேட்பாளா் வாகனத்தில் செல்லும் போது, ரூ. 50,000 வரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். அதேசமயம், ஒரு வாகனத்தில் நான்கைந்து நபா்கள் செல்லும்போது, அவா்கள் தலா ரூ. 50 ஆயிரத்தை எடுத்துச் செல்லலாமா? கூடாதா? என்ற தெளிவு இல்லை. அதை விளக்க வேண்டுமென கேட்டுள்ளோம். வாகனங்களுக்கான அனுமதியைப் பெற விண்ணப்பம் அளிக்கும் நடைமுறைக்கு கைப்பேசி செயலியை மட்டும் பயன்படுத்தாமல், நேரிலும் அளித்து பெற்றுக் கொள்ள வழிசெய்ய வேண்டுமென கேட்டுள்ளோம். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பீம்ராவ்: தோ்தல் நேரம் வெயில் காலம் என்பதால் வாக்குச் சாவடிகளில் மருத்துவக் குழுவை நியமிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். 40 முதல் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே வீடு வீடாக வாக்குச்சாவடி சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. இதைவிடுத்து முழுமையான அளவுக்கு வழங்க வேண்டும். வெறுப்புப் பேச்சுகள் தொடா்பாக, நேரடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.