சேலம், ஜலகண்டபுரத்தில் கடந்த புதன்கிழமை (மே 15) அன்று, கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு பட்டியலின மாணவர்களை குடிபோதையில் இருந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 10 பேர் தாக்கியுள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கடந்த வெள்ளியன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”பாதிக்கப்பட்ட 18 வயதான மாணவர்கள் ஆர். கமலேஷ் மற்றும் கே. மகி இருவரும் மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று இருவரும் தங்கள் வீட்டிற்கு 500 மீட்டர் தொலைவில் நாய் துரத்தியதால் ஓடி வந்துள்ளனர்.
நாயை விரட்டுவதற்கு இருவரும் கற்களை வீசியுள்ளனர். அது 10, 15 நபர்கள் கூடியிருந்த அங்குள்ள மயானத்தில் விழுந்துள்ளது. அந்த நபர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர். மாணவர்களை அழைத்து அவர்களின் பின்னணி குறித்து விசாரித்தவர்கள், இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்ததும் தாக்கியுள்ளனர். தாக்குதலில் மாணவர்கள் இருவரின் கழுத்து, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.
மாணவர்களின் தந்தை பேசுகையில், “இந்த தாக்குதலால் அதிர்ச்சியில் உள்ள இருவரும் வெளியே வருவதற்கே மிகவும் பயப்படுகின்றனர்” என்று கூறினார்.
தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்த மாணவர் மகி,”அவர்கள் என்னை அடித்து, என் சாதியைக் குறித்து மிகவும் தவறாகப் பேசினார்கள். அதில் ஒருவன் என் முகத்தில் எச்சில் துப்பி, நீயெல்லாம் படித்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டான். எனக்கு வெளியே செல்லவே பயமாக இருக்கிறது” என்று கூறினார்.
ஜலகண்டபுரம் காவல்துறையினர் 143, 341, 294(b), 323,324, 506 மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் ஜெயவேல் என்பவரைக் கைது செய்துள்ள ஜலகண்டபுரம் காவல்துறையினர், “நாங்கள் இதுகுறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மற்றவர்களையும் தேடி வருகிறோம். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான அனைவரையும் விரைவில் கைது செய்வோம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.