பூந்தமல்லி அருகே இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மாங்காடு அம்பாள் நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ராஜாஜி (45). இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற கட்சியின் மாநில தலைவராக இருந்து வருகிறார்.
இவருக்கு கலா என்ற மனைவியும் ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று (மே 22) மாலை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் மாங்காடு சாலையில் உள்ள தேநீர் கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கடைக்குள் புகுந்து ராஜாஜியை சரமாரியாக வெட்டினார்.
இதில் ராஜாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அந்த மர்ம நபர் சாதாரணமாக நடந்து சென்று பைக்கில் ஏறி தப்பியோடினார்.
இந்த சம்பவத்தையடுத்து கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த மக்களும் சிதறி ஓடினர். இது குறித்து பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி காவல் துறையினர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ராஜாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜாஜி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதையடுத்து அவரது குடும்பத்தினரும், கட்சி நிர்வாகிகளும் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து காவலர்கள் அங்கிருந்தவர்களை கலைத்து விட்டனர்.
மேலும் தற்போது ராஜாஜியின் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்பது குறித்து கடைக்குள் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.