அரசின் திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கொள்கை உருவாக்கம் உள்பட எட்டு முக்கிய செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொள்கை உருவாக்கம் உள்பட எட்டு முக்கிய செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அரசின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வசதியாக தனி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு ரூ.13.93 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு செயல்படுத்தவுள்ள பணிகள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பானது அரசின் முக்கிய செயல்பாடுகளில் செயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பணிக்கான தலைமை அமைப்பாகச் செயல்படும்.
எட்டு முக்கிய செயல்பாடுகள்: தமிழ்நாடு அரசின் எட்டு முக்கிய செயலாக்கத் திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கு தலைமை அமைப்புடன் இணைந்து நான்கு அரசுத் துறை நிறுவனங்கள் செயல்படும். கொள்கை உருவாக்கம், சிறப்பு அம்சங்களை ஏற்றுக் கொண்டு அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும். இந்தப் பணிக்கு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பொறுப்பாகச் செயல்படும்.
இதேபோன்று, திறன் மற்றும் கல்வி மேம்பாடு, திறன்களைக் கட்டமைத்தல் போன்ற பணிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் பணியில் அரசின் ஐசிடி அகாதெமி ஈடுபடுத்தப்படும். ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள், சமூகத்துக்கு பங்களிப்பு செய்யும் நிறுவனங்கள், புதுமை மற்றும் தொழில் துறைகள் வளா்ச்சி ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள
ஐடிஎன்டி-யுடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணைந்து செயல்பட உள்ளது.
இத்துடன், கணினி உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த எல்காட் உதவ உள்ளது.
முடிவுகளை எடுக்க எளிதாகும்: செயற்கை நுண்ணறிவை அரசின் செயல் திட்டங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் தரவுகளை எளிதில் திரட்டி முடிவுகளை துரிதமாக எடுக்க இயலும். மேலும், நோய்த்தொற்று பரவல், இயற்கைப் பேரிடா்கள், பொருளாதார தாழ்வு நிலைகள் எனப் பல்வேறு அம்சங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் அறிந்து அதற்கேற்ற வகையில் முடிவுகளை முன்கூட்டியே எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.