தென் தமிழகத்தில் சாதி தொடர்பான வன்முறை ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை சமீபத்தில் எச்சரித்ததாகக் கூறப்படும் நிலையில், நெல்லையில் தலித் இளைஞரைத் தாக்கிய 6 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் திங்கள்கிழமையில் (நவ. 4) 17 வயதான தலித் இளைஞர் ஒருவர்மீது, அவரது வீட்டின் வழியாக சென்ற காரை வேகமாக செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி பேசி, பிரச்னையை சுமூகமாக தீர்த்து உள்ளனர்.
இருப்பினும், காரில் வந்தவர்களுடன் சேர்ந்து மொத்தம் 10 பேர், அதேநாள் மாலையில் இருசக்கர வாகனங்களில் வந்து, அந்த தலித் இளைஞரின் வீட்டுக்குள் புகுந்து அவரை அரிவாள் மற்றும் மதுபானப் பாட்டிலைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த தலித் இளைஞர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தினையடுத்து, தாக்குதலில் நடத்திய அனைவரையும் கைது செய்யக் கோரி, மேலப்பாட்ட தலித் சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிந்தனர்.
இதையும் படிக்க: என்ன செய்யப் போகிறார் டிரம்ப்?!
தாக்குதல் நடத்திய பின்னர், அவர்கள் 6 பேரும் இருசக்கர வாகனங்களில் ஊரைவிட்டு வெளியே சென்றது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், 6 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்ட போதிலும், இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சாதி தொடர்பான வன்முறை ஏற்படக்கூடும் என்று தெற்கு தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு மாநில உளவுத்துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதால் சாதி தொடர்பான வன்முறைகள், தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரச்னையாக இருந்து வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் மதுரை, நெல்லை மாவட்டங்களில் தலித் அமைப்பினருக்கும் பிற சாதியினருக்கும் இடையில் வன்முறைகள் வெடித்தன. இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து, மதுரையில் முகாமிட்ட தமிழ்நாட்டின் டிஜிபி, வன்முறையைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆயுத விற்பனையாளர்கள், கிடங்குகள் வைத்திருப்பவர்கள் தங்கள் அடையாளங்களைப் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டதால், தற்காலிகமாக வன்முறை சம்பவங்களைக் குறைக்கப் பங்களித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.