முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மழைக்கான டிரெய்லர் வந்து கொண்டிருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் மழைக்கான டிரெய்லர் வந்துகொண்டிருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் தகவல்.

Updated On : 11 நவம்பர், 2024 at 9:34 AM
சென்னையில் மழை
பகிர்:

சென்னையில் மழைக்கான டிரெய்லர் வந்துகொண்டிருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் காலை முதல் வெயில் வீசிய நிலையில், கனமழைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், மழை குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான், தனது முகநூல் பக்கத்தில் சென்னையில் மழைக்கான டிரெய்லர் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் மேலும் கூறுகையில், சென்னையை நோக்கி மழை மேகங்கள் வந்துகொண்டிருப்பதாகவும், இது சிறிய ஆனால், தீவிரமான மழையாக இருக்கும், குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை மழை பெய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னையில் மழை நிகழ்வுகள் இன்று இரவுக்குப் பிறகு அல்லது நாளை காலை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, திங்கள்கிழமை (நவ. 11) இரவு நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் பதிவில், நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →