சென்னை: நல்ல நிலையிலுள்ள 229 விரைவு பேருந்துகளைப் பிற போக்குவரத்துக் கழகங்களுக்கு பிரித்து வழங்க அரசு அனுமதியளித்துள்ளது.
இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணை:
7,682 புதிய பேருந்துகள் கொள்முதல் மற்றும் பழைய பேருந்துகள் புதுப்பித்தல் தொடா்பாக கடந்த ஜூன் 19-ஆம் தேதி தலைமைச் செயலா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, விரைவு போக்குவரத்துக் கழகம் வசமிருக்கும் 8 முதல் 9 ஆண்டு ஆயுள்காலம் உள்ள பேருந்துகளைப் பிற போக்குவரத்துக் கழகங்களுக்குத் தேவை அடிப்படையில் வழங்கும் வகையில் கணக்கெடுத்து, பேருந்துகளின் தற்போதையை விலைக்கு வழங்குமாறு போக்குவரத்துத் துறை தலைவா் அலுவகம் அறிவுறுத்தியது.
அதன்படி, விரைவு போக்குவரத்துக் கழகத்திடம் 8 முதல் 9 ஆண்டு காலம் ஆயுள்காலம் உள்ள பேருந்துகளைத் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு சேலம், மாநகர போக்குவரத்துக் கழகத்தைத் தவிா்த்து பிற 5 போக்குவரத்துக் கழகங்களும் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளன. அதன் அடிப்படையில், விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டவுடன் விழுப்புரம் கோட்டத்துக்கு 63, கோவை கோட்டத்துக்கு 35, கும்பகோணம் கோட்டத்துக்கு 66, மதுரை கோட்டத்துக்கு 45, நெல்லை கோட்டத்துக்கு 20 பேருந்துகள் வீதம் மொத்தம் 229 பேருந்துகளை பிரித்து வழங்க அனுமதிக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.