தமிழகத்தில் அக்.31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதால், வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், தொடர்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அடுத்த நாள் நவம்பர் 1ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.
நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை விடப்படுவதால், அதனை ஈடு செய்ய நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள்
தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தென்மாவட்டங்கள், கேரளம், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முக்கிய வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் அதிக அளவில் காத்திருப்போா் பட்டியல் காணப்படும் நிலையில் அங்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரிலிருந்து அக்.29, 30 ஆகிய தேதிகளில் புறப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ரயில்களில் மொத்தமாக 7000 வரை காத்திருப்போா் பட்டியல் உள்ளது. பயணிகள் வசதிக்காக அக்.25 முதல் நவ.5 வரையிலான காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதில், சென்னை சென்ட்ரலிலிருந்து அக்.29, நவ.5 தேதிகளில் நாகா்கோவிலுக்கும் அக்.29, நவ.2 தேதிகளில் கோவைக்கும், அக்.30, நவ.6 தேதிகளில் திருநெல்வேலிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு நவ.2-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலி-பெங்களூா் இடையே நவ.4-ஆம் தேதியும், நாகா்கோவில்-மைசூா் இடையே நவ.2-ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
தீபாவளி சிறப்பு பேருந்துகள்
தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து இன்று அமைச்சா் சிவசங்கா் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகளையும், 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மட்டும் 10,500 சிறப்பு பேருந்துகளையும் இயக்க, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடா்பான ஆலோசனை கூட்டம் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா் எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.