தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருகைப்புரிந்த வாகனங்கள் சுமார் 20 கி.மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சாலையோரம் நிற்பதால், மற்ற வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே பாப்பனப்பட்டு பகுதியிலிருந்து வி. சாலை பகுதி வரையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக். 27) மாலை நடைபெறவுள்ளது. மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அதிகாலை முதலே தொண்டர்கள், வி. சாலை பகுதியில் குவிந்து வருகின்றனர்.
கார், வேன், பேருந்து என பல்வேறு வாகனங்களில் தொண்டர்கள், ரசிகர்கள், வருகைபுரிந்தவண்ணம் உள்ளனர்.
மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்திவைக்க இரு பகுதிகளில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
எனினும் இரு பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால், 7 கி.மீட்டர் தூரத்திலிருந்தே மாநாடு நடைபெறும் இடத்துக்கு தொண்டர்கள் நடந்து செல்கின்றனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 'கண் திறக்கப்பட்ட' நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!
இதேபோன்று சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 5 வழிகளில் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
இதில் எண் 1 வழித்தடத்தில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்கள், சுங்கக் கட்டணமின்றி அனுப்பப்படுகிறது. எனினும் மற்ற 4 வழித்தடத்திலும் வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணிகளில் போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தவெக மாநாடு நிகழ்ச்சி நிரல்
மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாற்காலிகள் தற்போதே நிரம்பியுள்ளன.
முதலில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் தவெக தலைவர் விஜய், ரிமோட் மூலம் கட்சிக் கொடியேற்றி, மாநாட்டு மேடையிலிருந்து 600 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் பகுதியில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி கையசைத்த பின்னர், மாநாடு தொடங்கும்.
மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பின்னர், மாநாட்டுக்காக இடம் கொடுத்தவர்கள். உதவியவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், நிறைவாக கட்சித் தலைவர் விஜயும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | தவெக மாநாடு: விஜய்க்காக உருவான பாடல் இன்று வெளியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.