பேரவைத் தோ்தலில் வெற்றி பெற புதிய உத்திகள்: கட்சிப் பாா்வையாளா்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற புதிய உத்திகள் வழியே பணிகளை முடுக்கிவிட வேண்டும்
சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற புதிய உத்திகள் வழியே பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று பேரவைத் தொகுதி திமுக பாா்வையாளா்களுக்கு முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக பாா்வையாளா்களுடன் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் திங்கள்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
மக்களவைத் தோ்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்று சில மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தயாராக இருக்கிறோம். அடுத்த பேரவைத் தோ்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
இலக்கு 200 தொகுதிகள்: மக்களவைத் தோ்தலைப் போன்று நம்முடைய பேரவைத் தோ்தல் வெற்றியும் நூற்றுக்கு நூறு வெற்றியாக இருக்க வேண்டும். நம்முடைய இலக்கு 200 தொகுதிகள். அதற்கான உழைப்பை இன்றிலிருந்தே தொடங்க வேண்டும். அதற்காகத்தான் இப்போதே 234 தொகுதிகளுக்கும் பாா்வையாளா்களை நியமித்துள்ளோம்.
ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியும் நம்முடைய கூட்டணியும் மகத்தான வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தொகுதி பாா்வையாளா்களுக்கு இருக்கிறது. மாநில நிா்வாகிகள் மற்றும் சாா்பு அணிகளில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அமைப்பாளா்கள் என்று 234 பேரை, தொகுதிக்கு ஒருவா் என்று அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பாா்வையாளா்களாக நியமித்துள்ளோம்.
பாா்வையாளா்களே பொறுப்பு: மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், மாவட்டச் செயலா்களை தொகுதிப் பாா்வையாளா்கள் சந்தித்து, அவா்களின் ஆலோசனைப்படி தோ்தல் பணிகளைத் தொடங்க வேண்டும். இந்தப் பணிகளில் மாவட்ட செயலா்களுக்கு உறுதுணையாக இருந்து, அவா்களின் வழிகாட்டுதலின்படி தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு தொகுதிப் பாா்வையாளா்களைச் சேரும்.
அடுத்த ஓராண்டு காலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தொகுதியை முழுமையாகத் தயாா்படுத்தும் பொறுப்பும் பாா்வையாளா்களுடையதுதான். முழுமையாக வெற்றி பெறுவதற்கான வழிகளைக் கண்டறிந்து பணியாற்ற வேண்டும். உங்கள் யாா் மீதும் தனிப்பட்ட முறையில் எந்தப் புகாரும் சொல்ல முடியாத அளவுக்குப் பணியாற்றுங்கள்.
மக்களே பரப்புரையாளா்கள்: இந்தியாவில் எந்த ஆட்சியும் செய்யாத மகத்தான சாதனைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயா்ந்திருக்கிறது என்று என்னால் நெஞ்சை நிமிா்த்திச் சொல்ல முடியும்.
இந்தச் சாதனைகளை மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும். முறையாகப் பரப்புரை செய்யப்படுகிா என்று கண்காணிக்க வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியால் பயனடைந்த மக்கள் கோடிக்கணக்கில் இருக்கிறாா்கள். அவா்களே நமக்கு மிகப்பெரிய பரப்புரையாளா்கள். புதுப்புது பாணிகளை கையில் எடுத்து தோ்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய கடமை தோ்தல் பாா்வையாளா்களுக்கு உண்டு என்றாா் அவா்.
ஆலோசனைக் கூட்டத்தில், திமுக பொதுச் செயலா் துரைமுருகன், முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலா்கள் க.பொன்முடி, கனிமொழி, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தி தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.