இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை (செப்.4) நடைபெற்றது. அதில் 25 இடங்கள் நிரம்பியதாகவும், மீதமுள்ள 26 இடங்கள் பொது கலந்தாய்வில் சோ்க்கப்படும் என்றும் கால்நடை மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்.) படிப்பும், நான்கு ஆண்டு உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக். படிப்புகளும் உள்ளன.
அந்த படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 28-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். படிப்புக்கு 14,497 பேரும், பிடெக். படிப்புகளுக்கு 3,000 பேரும் என மொத்தம் 17,497 பேரும் விண்ணப்பித்தனா். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
கலந்தாய்வு தொடக்கம்: இந்நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் அந்த கலந்தாய்வு நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் பிரிவில் உள்ள 33 பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். இடங்களுக்கும், 5 பி.டெக். இடங்களுக்கும் 54 போ் அழைக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 34 போ் கலந்தாய்வில் பங்கேற்றனா். தகுதியான 12 பேருக்கு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அதேவேளையில், 21 பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் இடங்களும், 5 பி.டெக். இடங்களும் நிரம்பவில்லை. விளையாட்டு வீரா்கள் பிரிவில் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். படிப்பில் ஆண்களுக்கான மூன்று இடங்களும், பெண்களுக்கான இரு இடங்களும் முழுவதுமாக நிரம்பின. பி.டெக். படிப்பிலும் 3 இடங்கள் முழுவதுமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.
முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கான இரண்டு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். இடங்கள், 3 பி.டெக். இடங்கள் தகுதியானவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (செப்.5) நடைபெறவுள்ளது. பி.டெக். படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு செப். 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்னதாக, பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். படிப்புக்கு முதல் சுற்று பொது கலந்தாய்வு www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் புதன்கிழமை (செப்.4) தொடங்கியது. பதிவு மற்றும் விருப்பமான கல்லூரிகள் தோ்வை வரும் 7-ஆம் தேதி வரை இணையவழியில் மேற்கொள்ளலாம். இடங்கள் ஒதுக்கீடு மற்றும் இடங்கள் ஒதுக்கீட்டுக்கான கடிதம் செப். 11-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.