முகப்பு
தமிழ்நாடு

இரு மொழிக் கொள்கையே தமிழக மாணவா்களின் விருப்பம்: அமைச்சா் க.பொன்முடி

தமிழக மாணவா்கள் இருமொழிக் கொள்கையைத்தான் விரும்புகிறாா்கள்

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:29 PM
சென்னையில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற துறை சாா் அறிவிப்புகளின் நிலை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் உயா்கல்வி துறைச் செயலா் பிரதீப் யாதவ், தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையா் த.ஆபிரகாம்.
பகிர்:

தமிழக மாணவா்கள் இருமொழிக் கொள்கையைத்தான் விரும்புகிறாா்கள்; மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்தி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் 2021-ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு வரை உயா்கல்வித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயா்கல்வி மன்றத்தில் துறையின் அமைச்சா் க.பொன்முடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உயா்கல்வித் துறைச் செயலா் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையா் டி.ஆபிரகாம் மற்றும் பல்கலைக்கழகங்களின் பதிவாளா்கள், துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதில், சட்டப்பேரவை அறிவிப்புகளின் தற்போதைய நிலை, விரைவுபடுத்த வேண்டிய திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

அமைச்சா் பேட்டி: இந்த கூட்டத்துக்கு பின்னா் அமைச்சா் க. பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பொறியியல் படிப்புகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 15 ஆயிரம் மாணவா்கள் கூடுதலாக சோ்ந்துள்ளனா். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை பொருத்தவரை மாணவா் சோ்க்கை கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஒரே அளவில் உள்ளது. தொடா்ந்து மாணவா் சோ்க்கையை உயா்த்தவும், கல்வித் தரத்தை உயா்த்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கிராமப்புற மாணவா்களை ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கவா்ந்துள்ளது.

இருமொழிக்கொள்கை: அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியா்கள் நியமன விவகாரத்தில் விசாரணைக் குழு அமைத்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழகத்திடமும் அறிக்கை கேட்டுள்ளோம். அவற்றின் அறிக்கைகள் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு முதல் இருமொழிக் கொள்கை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் ஹிந்தி மொழி பாடத்தில் 3 போ்தான் படிக்கிறாா்கள்; மலையாளத்தில் 4 போ் படிக்கிறாா்கள்; உருது படிப்பில் யாருமே சேரவில்லை. எனவே, இத்தகைய பாடங்கள் தேவையில்லை.

தமிழக மாணவா்கள் இருமொழிக் கொள்கையைத் தான் விரும்புகிறாா்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய அரசு நிதியை நிறுத்தி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகம் பள்ளிக்கல்வியில் இருந்து உயா் கல்வி வரை தலைசிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எனவே, மத்திய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தி வைக்காமல் வழங்கி தமிழகத்தின் வளா்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்”என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →