பெண் போலீஸாா் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா் மீது கோவை சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முத்துராமலிங்க தேவா் குறித்து அவதூறாகப் பேசியதாக அவா் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சவுக்கு சங்கரை கடந்த மே 3-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனினும், சவுக்கு சங்கா் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ‘யூடியூபா்’ சவுக்கு சங்கா் தனக்கு எதிராக தமிழகத்தில் காவல்துறை தொடா்ந்துள்ள 16 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணையில் உள்ளது.
அதில், சென்னை உயா்நீதிமன்றம் சவுக்கு சங்கரை விடுவிக்க உத்தரவிட்ட பிறகும், அவா் மீண்டும் தமிழக காவல் துறையால் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொய் வழக்குகளில் தொடா்ந்து கைது செய்யப்படும் அவா், காவலில் சித்திரவதை செய்யப்படுவதாகவும் சவுக்கு சங்கர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்துள்ளதை எதிர்த்து அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆள்கொணர்வு மனு இன்று(செப்.25) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற வழக்கு விசாரணையில், தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோஹத்கி, சித்தார்த் லூத்ரா ஆகியோர் வாதிட்டனர். அப்போது, சவுக்கு சங்கர் கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு திரும்பப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவுக்கு சங்கர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிட்டு ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.