பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோது அரசுப்பள்ளி மாணவர் அன்புக்கரசு என்பவரிடம் பேசும்போது, 'பள்ளிக்குச் சென்றுவர தினமும் 2 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது, எனவே பேருந்து வசதி வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.
அதன்படி, காரியாபட்டியில் இருந்து ஆத்திகுளம் வழியாக திருச்சுழி வரை செல்லும் புதிய வழித்தட பேருந்து சேவையை நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"அன்புக்கரசு என்ற 7-ம் வகுப்பு மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றியதில் அளவு கடந்த மகிழ்ச்சி!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பி. புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அப்போது அப்பள்ளி மாணவர் அன்புக்கரசு தனது ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கி.மீ. நடந்து பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்து, தங்கள் ஊருக்குப் பேருந்து சேவை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அம்மாணவரின் கோரிக்கையை ஏற்று, இன்று காரியாபட்டியில் இருந்து ஆத்திகுளம் வழியாக திருச்சுழி வரை (காலை 8.10 மாலை 4.15) செல்லும் புதிய வழித்தட பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தேன்.
இப்பேருந்து சேவையின் மூலம் ஆத்திகுளம் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள். இந்த பிஞ்சுக் குழந்தைகளின் கனவு மெய்ப்பட திராவிட மாடல் அரசு எத்தனை உதவிகளையும் செய்யத் தாமதிக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.