கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமாா் 67 போ் உயிரிழந்தனா். தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் விஷ சாராயம் விற்பனை செய்வது, கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 21 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஆகியோா் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு, நீதிபதி சுந்தா் மோகன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டாா்.
ஆனால், மனுதாரா்கள் தரப்பில், 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு அவா்கள் தினசரி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டாா்.