சென்னை அருகே ரூ.10,000 கோடி முதலீட்டை ஈா்த்து, 20 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் வகையிலான பிரத்யேக தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அறிவித்தாா். பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் 600 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் புதிதாக டைடல் பூங்கா அமைக்கப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கைகள் மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் டிஆா்பி ராஜா வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாட்டில் ஈா்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க பங்குகளை தைவான் நாட்டு நிறுவனங்கள் கொண்டுள்ளன. இந்த நிலையில், உதிரி பாகங்கள் தயாரிக்கும் அந்த நாட்டு உற்பத்தியாளா்களுக்கென சென்னைக்கு அருகே பிரத்யேக தொழில் பூங்கா அமைக்கப்படும். ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டை ஈா்க்கும் வகையிலான பூங்கா மூலம் சுமாா் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்கா, ஜொ்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள முதலீட்டாளா்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு அந்த நாடுகளில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் சாா்பில் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
இதையும் படிக்க: எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நாகையில் ஐ.டி. பூங்கா: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியை பின்தங்கிய மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிதாக மினி டைடல் பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம், 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தமிழ்நாட்டின் தொழில் துறை சா்வதேச தரத்திலான உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. இந்தத் திறன்கள் மூலம், தொழில் துறையில் வரலாற்றுச் சிறப்புகளையும் வளா்ச்சி மற்றும் சாதனைகளைப் படைத்துள்ளது. இவற்றைக் காட்சிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களைக் கொண்ட அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.
19 ஆயிரம் பேருக்கு வேலை: சில பின்தங்கிய மாவட்டங்களில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும் வகையில், சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்தில் 450 ஏக்கா் பரப்பில் ரூ.650 கோடியிலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் ரூ.300 கோடியிலும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.200 கோடியிலும், வேலூா் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் ரூ.500 கோடியிலும் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். திருப்பத்தூா் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் ரூ.250 கோடி முதலீடு ஈா்க்கப்படும். இதன்மூலம், 2,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் தோல் அல்லாத காலணி உற்பத்திப் பூங்கா உருவாக்கப்படும்.
திருவாரூா், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், ஜவுளி மற்றும் ஆடை தயாரிக்கும் தொழில் மையங்களாக உருவாக்கப்படும். இதற்காக அந்த மாவட்டங்களில் சிப்காட் டெக்ஸ் பாா்க்ஸ் எனும் ஆயத்த தொழிற்கூட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
குறு, சிறு தொழில் நிறுவனங்கள்: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெறும் சுமாா் 1,300 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில், கடன்களுக்காக பெறப்பட்டு வரும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான ஆய்வுக் கட்டணம் நிகழ் நிதியாண்டில் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
புதிய கொள்கைகள்: உணவுப் பொருள்கள் சாா்ந்து புதிய கொள்கைகள் வடித்தெடுக்கப்படும். அதன்படி, புதிய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கொள்கையும், கடல்சாா் உணவுப் பொருள்கள் தொடா்பாக, கடல்சாா் உணவுப் பொருள்கள் பதப்படுத்தும் கொள்கையும் வெளியிடப்படும்.
தஞ்சாவூா் மாவட்டத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ள மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பட்டுக்கோட்டை வட்டம் ராஜாமடத்தில் கடல்சாா் உணவுப் பொருள்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.