நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை(ஆக. 5) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று (ஆக. 4) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக. 5 நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக. 6 நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக சுனமழையும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக. 8 ஆம் தேதி வரை மீனவர்கள், தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.