பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை (ஆக. 7) முதல் விநியோகிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட உதவி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகள் மே மாதம் வெளியாகின. பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் ஆக. 7 முதல் விநியோகிக்கப்படவுள்ளது.
சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலா்கள் வழியாக பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தோ்வா்கள் தோ்வெழுதிய மையங்கள் வாயிலாகவும் அசல் சான்றிதழ்களை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களைத் தோ்வா்கள் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.