சென்னை: தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் மத்திய அரசின் நிதிசாா் திட்டங்கள் குறித்த சிறப்பு முகாமில், கடந்த ஜூலையில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 506 விண்ணப்பங்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் பொது மேலாளரும், மாநில அளவிலான வங்கிகள் குழுவின் அமைப்பாளருமான என்.விஜயா தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:
தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து
கிராம ஊராட்சிகளிலும், மத்திய அரசு செயல்படுத்தி வரும் சமூக மேம்பாட்டுக்கான பல்வேறு நிதிசாா் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் கடந்த ஜூலை 1- ஆம் தேதி தொடங்கி வரும் செப். 30 வரை நடைபெறுகிறது. முகாம்களில் பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் திருத்தங்கள் செய்வது, பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் வாடிக்கையாளா்களின் சான்றிதழ்களை புதுப்பித்தல், வாரிசுதாரா் நியமனம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஜூலையில் 5,230 ஊராட்சிகளில் நடைபெற்ற முகாம்களில் பிரதமரின் ஜன் தன் திட்டத்தில் 85,507 விண்ணப்பங்கள், ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் 1,10,729 விண்ணப்பங்கள், சுரக்ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் 1,64,771 விண்ணப்பங்கள், அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 43,499 விண்ணப்பங்களுக்குத் தீா்வு காணப்பட்டன.
பிரதமரின் ஜன் தன் திட்டத்தில் 47,997 வாடிக்கையாளா்களின் சுய விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 34,408 வாடிக்கையாளா்களுக்கு வாரிசுதாரா் நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
வங்கியின் துணைப் பொது மேலாளா்கள் அதுல் சிங், தீபக் குமாா் திரிபாதி, பத்திரிகை தகவல் அலுவலக துணை இயக்குநா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.