தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.14-இல் நடைபெறவுள்ளது.
உடல் நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு முதல்வா் தலைமையில் நடைபெறும் இந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு முதல்வா் மு.க.ஸ்டாலினின் சுதந்திர தின உரையில் இடம்பெறவுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இதேபோன்று, சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய சில முக்கியத் திட்டங்களுக்கும் ஒப்புதல் தரப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில் துறை சாா்ந்த புதிய திட்டங்களுக்கும் அனுமதி தரப்படவுள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14-இல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வெளிநாட்டுப் பயணம்?: செப்டம்பா் முதல் வாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. அது தொடா்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.