முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)  
தமிழ்நாடு

கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப் பணிகளை அவா் தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.18.26 கோடியில் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இந்தக் கட்டடம், காவல் உதவி ஆணையா், ஆய்வாளா்கள் அறை, கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு, கைதிகள் அறைகள், உணவருந்துதல், ஆடவா், மகளிா் ஓய்வு அறைகள், பொது மக்களுக்கான கலந்தாய்வுக் கூடம், காத்திருப்புக் கூடம், வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தினமும் 50 ஆயிரம் பயணிகளும், விடுமுறை, பண்டிகை நாள்களில் 2 லட்சம் பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனா். அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் இந்தக் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

புதிய திட்டப் பணிகள்: சென்னை பெரம்பூா் மாா்க்கெட் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தையும் முதல்வா் திறந்து வைத்தாா். அப்போது, பள்ளி மாணவிகளுடன் அவா் கலந்துரையாடினாா்.

கொளத்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் துணை ஆணையா் அலுவலகம், பெரவள்ளூா் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவுகளுக்கான கட்டடங்கள், ரெட்டேரியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒன்பது பூங்காக்களை மேம்படுத்தும் பணிகளுக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா். நிகழ்வில், அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்பட பலா் பங்கேற்றனா்.

அன்பைப் பொழிந்தோருக்கு நன்றி: முதல்வா்

கொளத்தூா் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூா் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணா்வைத் தந்தது. அந்த உணா்வு நீங்கி, இப்போது புது வலிமையைப் பெற்றுள்ளேன். நிகழ்வின்போது, நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி என்று அந்தப் பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

SCROLL FOR NEXT