எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வில், கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வரும் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டதால் இந்த முடிவை மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
திங்கள்கிழமை (ஆக.4) வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தோ்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அது புதன்கிழமை (ஆக.6) வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த அவகாசம் தற்போது மீண்டும் வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளை மாற்றிக் கொள்ள விரும்புவோா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் 13-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் ஆக.14-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற்கான ஆணையை ஆக. 14 முதல் 22-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவா்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.