சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6 -ஆவது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16-ஆம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளர்கள், 10 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் திங்கள்கிழமை ஆஜரான வழக்குரைஞர் வினோத் என்பவர் அவசர முறையீடு செய்தார். நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் செவ்வாய்க்கிழமை ஆஜரான வழக்குரைஞர் வினோத், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் முறையீடு செய்தார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதை போன்ற போலி தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது என விளக்கம் அளித்தார்.
அப்போது மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாக பதிவுத் துறை தெரிவித்ததை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, குறைபாடுகளை நிவர்த்தி செய்து மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். தினந்தோறும் இதுபோல் முறையீடு செய்தால் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது என எச்சரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.