பள்ளி மாணவர்கள் கோப்புப்படம்
தமிழ்நாடு

பாரபத்தியில் தவெக மாநாடு! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!!

மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாடு காரணமாக 3 கிராமங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் தொடங்கியிருக்கும் நிலையில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக மாநாடு காரணமாக, சாலைகளில் கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகரம் முழுவதும் சாலைகள், வாகனங்களால் நிரம்பி வழியும் நிலையில், பள்ளி மாணவர்கள், வீடு செல்ல வசதியாக, அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரபத்தியை ஒட்டியிருக்கும் 3 கிராமங்களில் முற்பகலோடு பள்ளிகள் நிறைவு பெற்றுள்ளது. அதாவது, எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள அரசுப் பள்ளிகள் அரைநாள் விடுமுறை அறிவித்து மாணவர்களை விரைவாக வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநாட்டுக்கு வந்த தொண்டர்களின் வாகனங்கள் அவசர வழித்தடத்திலும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. திடலுக்குள் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் நிலையில், இன்னமும் லட்சக்கணக்கானோர் மாநாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உள்ளே வரவும், அவர்களது வாகனங்களை நிறுத்தவும் இடமில்லாமல் சாலைகள் நிரம்பி வழிகின்றன.

மாநாடு நடைபெறும் திடலில், பிரமாண்ட மேடை, நடந்து வந்து விஜய் தொண்டா்களை சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டா்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

கடும் வெயில் காரணமாக, மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த தரைவிரிப்புகளை தொண்டர்கள் கூரை போல பிடித்துக் கொண்டார்கள். சில இளைஞர்கள் குழந்தைகளுடன் மாநாட்டுக்கு வந்திருப்பதால் குழந்தைகளும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியும் நடந்தது. மற்றொரு பக்கம், அருகில் உள்ள மரங்களின் இலைகளை உடைத்து தொண்டர்கள் தலை மீது வைத்துக்கொண்டு வெய்யிலிருந்து தற்காத்துக் கொள்ள முயன்று வருகிறார்கள்.

தவெக மாநாடு இன்று காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், சுமாா் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், கொடூர வெய்யில், தவெக தொண்டர்களுக்கு கடும் சவாலாக மாறிப்போனது.

மேற்கூரை இல்லாததால், காலை முதலே மாநாட்டுக்கு வருகை தந்த இளைஞர்கள் பலரும் வெய்யில் காரணமாக மயக்கமடைந்து வருவதாகவும் அவர்களுக்கு முதலுதவி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

இதுகூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

SCROLL FOR NEXT