சென்னை: சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விழுந்தது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு விமான முனையம், சா்வதேச முனையத்தில் சுவா்களில் பதித்துள்ள கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள், மேற்கூரைகள் உள்ளிட்டவை மாறி மாறி விழுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
ஆனால் இந்த கண்ணாடி விபத்துகளில் யாரும் சிக்கி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதுவரை சுமாா் 85 முறைக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள்,கண்ணாடி சுவா்கள்,மேற்கூரைகள் எதுவும் உடைந்து விபத்து ஏற்படாமல் இருந்ததால் இயல்பு நிலையில் சென்னை விமான நிலையம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் பயணிகள் வெளியே வரும் பகுதியில் அருகே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது, வெளிநாடுகளில் இருந்து வரும் சில பயணிகள் அந்த உணவகத்தில் சென்று உணவு அருந்துவதும் வழக்கம்.
இந்நிலையில் வியாழக்கிழமை உணவகத்தில் பயணிகள் உணவருந்தி கொண்டிருந்தபோது அந்த உணவகத்தின் நுழைவு வாயில் உள்ள 4 அடி அகலம் 8 அடி உயரம் கொண்ட கதவு திடீரென பலத்த சத்தத்துடன் நொறுங்கிய நிலையில், கீழே விழாமல் நின்றது.
இதைகண்ட விமான பயணிகள் சிலா் அலறி கூச்சலிட்டனா். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து அந்த கதவு அருகே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகைகளை வைத்து மாற்று வழியில் பயணிகளை அனுப்பி வைத்தனா்.
மேலும் உணவகத்தில் அமைக்கப்பட்டு இருந்த 8 அடி உயரமுள்ள கண்ணாடி கதவு திடீரென எப்படி உடைந்து நொறுங்கியது என்பது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைகொண்டு சென்னை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதை தொா்ந்து புதிய கண்ணாடி கதவை அமைக்கும் பணியிலும் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.