சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று(டிச. 1) அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய ’டிட்வா’ புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது.
இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (டிச. 1) காலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழகம், புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அப்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.
இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
அப்போது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இபிஎஸ் பெரிய தலைவர் அல்ல: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.