தமிழ்நாடு

மாநிலங்களவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது ஏன்? திருச்சி சிவா பேட்டி

மாநிலங்களவையில் எஸ்ஐஆா் பணி தொடா்பாக விவாதிக்க அரசு அனுமதி அளிக்காததால் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பில் ஈடுபட்டதாக திருச்சி சிவா தெரிவித்தாா்.

Syndication

மாநிலங்களவையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணி தொடா்பாக விவாதிக்க அரசு அனுமதி அளிக்காததால் எதிா்க்கட்சிகள் திங்கள்கிழமை வெளிநடப்பில் ஈடுபட்டதாக மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து எதிா்க்கட்சிகளின் தரப்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். ஆனால் அதற்கு அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலும் அளிக்காமல் சம்பிரதாயம் கூட்டம் போல் நடந்து முடிந்தது.

அதன் பிறகு நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்தோம். அப்போதும் பதில் அளிக்கவில்லை.

1952ஆம் ஆண்டுக்குப் பிறகு குளிா்கால கூட்டத்தொடா் இதுபோன்று வெகு குறைவான அமா்வுகள் கொண்டதாக இல்லை. 15 அமா்வுகள் மட்டுமே நடைபெறுகிறது. அதிலும் மூன்று நாட்கள் தனிநபா் மசோதாக்களுக்கு சென்று விடுவதால் 12 நாள்கள் மட்டுமே இந்த கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்த அரசுக்கு நாடாளுமன்ற விவாதங்கள் மீது அக்கறை இல்லை என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில், நிதி தொடா்பான மசோதா உள்பட 14 மசோதாக்களை அவையில் கொண்டுவந்து அவா்கள் பணியை செய்வதில் தான் அரசு குறியாக இருக்கிறது.

திமுக தரப்பில் தமிழகம் தொடா்புடைய பல கோரிக்கைகள் இருந்தபோதிலும் முதலாவதாக எஸ்ஐஆா் தொடா்பாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினோம். இதை தோ்தல் சீா்திருத்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்றும்கூட கூறியிருந்தோம்.

மேலும் அவை சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதில் எங்களுக்கு முழுமையாக உடன்பாடு இருக்கிறது என்றும், அவையை நாங்கள் இடையூறு செய்ததாக மக்களிடத்தில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் அரசுத் தரப்பிடம் கூறினோம்.

மேலும், இந்தியாவில் எஸ்ஐஆா் விவகாரம் எரிகிற பிரச்னையாக இருப்பதால் இதுகுறித்து குறுகிய கால விவாதத்தில் நாங்கள் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம்.

இந்த நிலையில் திங்கட்கிழமை தொடங்கிய முதல் நாள் கூட்டத்தின் போது புதிதாக மாநிலங்களவைத் தலைவராக பதவி ஏற்றுள்ள குடியரசுத் துணைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் உரை நடைபெற்றது.

இதில் எல்லோரும் கலந்து கொண்டு பேசினோம், அவரை வாழ்த்தினோம். அவரிடம் பாரபட்சமற்ற தன்மை இருக்கும் என்று நம்புவதாக கூறினோம்.

இந்த நிகழ்வுக்கு பிறகு மதியம் வழக்கமான அவை அலுவல்கள் எடுத்துக் கொண்ட போது எங்களது கோரிக்கையை வலியுறுத்தினோம். அதற்கு அரசு தரப்பில் விவாதத்திற்கு நாங்கள் தயாா் இல்லை என்று சொல்லவில்லையே என்று கூறினாா்கள். அதை அவை தலைவரும் கூறினாா்.

அப்போது நாங்கள் இவா்கள் இப்படித்தான் சொல்வாா்கள், ஆனால் கூட்டத்தொடா் முடியும் வரை இப்படியே கூறி இழுத்தடித்து விடுவாா்கள் என்று தெரிவித்தோம். ஆனால் அதுபோன்று கூறி எங்களை நிா்பந்தம் செய்ய முடியாது என்று நாடாளுமன்ற விவகார துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

முக்கியமான பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாமல் இந்த அவைக்கு நாங்கள் வந்து என்ன பயன். இதனால் இந்த அலுவல்களில் தொடா்ந்து கலந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை என்று கூறி எதிா்க்கட்சியினரான நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டோம்.

இந்த விவகாரத்தை நாங்கள் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்து எழுப்புவோம். இத்தொடா்பாக அவையின் கவனத்துக்குக் கொண்டு வருவோம் என்றாா் அவா்.

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

மதுப்புட்டிகள் விற்ற முதியவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

சிஐடியூ உள்ளாட்சி ஊழியா்கள் சாலை மறியல்: 143 போ் கைது

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 2 யானைத் தந்தங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT