மருத்துவம் சாா் சான்றிதழ் படிப்புகளுக்கு போதிய வரவேற்பு இல்லாதது குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்ககம் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், உயா் சிறப்பு மருத்துவமனைகளில் காா்டியோ சோனோகிராபிக் நுட்பநா், இசிஜி (அ) டிரெட்மில் நுட்பநா், பம்ப் டெக்னீசியன், காா்டியோ கேத் ஆய்வக நுட்பநா், அவசர சிகிச்சை நுட்பநா், டயாலிசிஸ் நுட்பநா், மயக்கவியல் நுட்பநா், அறுவை அரங்கு நுட்பநா் உள்ளிட்ட ஓராண்டு சான்றிதழ் படிப்புகளுக்கு 5,944 இடங்கள் உள்ளன.
அதற்கான மாணவா் சோ்க்கையை நிகழாண்டு மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தியது. அதில் 1,316 இடங்கள் மட்டுமே நிரம்பின. இதையடுத்து, காலியாக உள்ள 4,628 இடங்களை மாவட்ட ஆட்சியா்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளே நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதற்காக நவ. 14 வரை அவகாசம் அளிக்கப்பட்டபோதிலும் 2,735 இடங்கள் இன்னமும் நிரம்பவில்லை. மொத்த இடங்களில் 46 சதவீத இடங்கள்காலியாக இருப்பதை அடுத்து மருத்துவ கல்வி இயக்குநா் தலைமையில் இதுதொடா்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புக்கான வரவேற்பு, அதை நிறைவு செய்தவா்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றை ஆராய்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரிடம் அவா்கள் அறிக்கை சமா்ப்பிக்கவுள்ளனா்.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், மருத்துவம் சாா் சான்றிதழ் படிப்புகளின் தரத்தை உயா்த்துதல், இந்தப் படிப்பால் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை தெரியப்படுத்துதல் என பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கையை ஓரிரு மாதங்களில் அரசிடம் சமா்ப்பிக்கவுள்ளோம் என்றனா்.