- இராச.கார்த்திகேயன்-
உடல் பருமன் பாதிப்பு அண்மைக்காலமாக சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தான பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களிடம் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்னையை சரிசெய்ய போக்குவரத்துக் கழகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் உடல் பருமன் விகிதம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் மக்களவையில் தாக்கல்செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், நாட்டில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் பருமன் விகிதம் மும்மடங்கு அதிகரித்துள்ளது என்றும், வியத்நாம், நமீபியா நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிக அளவில் குழந்தைகளின் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உடல் பருமனால் சுமார் 57.9% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது மற்ற தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்எப்எச் எஸ் -5) தரவுகளின்படி, 2019- 2021 காலகட்டத்தில், தமிழகத்தில் பெண்களிடையே, குறிப்பாக இளம்பெண்களின் எடை மற்றும் உடல் பருமன் விகிதம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், உடல் பருமன் விகிதம் நகர்ப்புற ஆண்களிடம் 29.8 சதவீதமாகவும், கிராமப்புற ஆண்களிடம்19.3 சதவீதமாகவும் உள்ளது. 18 வயது முதல் 69 வயதுடைய ஆண்களிடையே உடல் பருமன் 18.9 சதவீதத்தில் இருந்து 22.9 சதவீதமாகவும், பெண்களிடையே 20.6 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உடல் பருமன் பாதிப்பு ஆண்களிடையே 37 சதவீதமாகவும், பெண்களிடையே 40.4 சதவீதமாகவும் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் பருமன் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களில் பல வகையிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, பேருந்து பயணங்களில் மிக மோசமான சூழலை அவர்கள் அனுபவிக்கும் நிலை கடந்த பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனால், அருகே அமர்ந்து பயணிப்பவர்களும் சிரமப்படும் சூழல் உள்ளது.
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 கோட்டங்கள் மூலம் 10,125 வழித்தடங்களில் சுமார் 20,260 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் 1.76 கோடி பேர் பயணிக்கின்றனர். இவ்வளவு பேர் பயணித்தாலும் அவர்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னையாக உள்ளது பேருந்துகளில் இருக்கை அளவுதான்.
பொதுவாக, கடந்த காலங்களில் உடல்பருமன் என்பது பெரிதாக இல்லை. ஆனால், தற்போது 40- 60 சதவீதம் பேர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளதாகத் தெரியவருகிறது. இதில், சிறார், இளஞர்கள் என்ற பாகுபாடு இல்லை. உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தபோது பேருந்துகளில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளின் அளவு போதுமானதாக இருந்தது.
இந்த இருக்கைகள் சுமார் ஒன்றேகால் அடி, அதாவது 15 இஞ்ச் (அங்குலம்) அகலத்தில் அமைக்கப்படுகின்றன. இதில், 32 இஞ்ச் இடுப்பளவு உள்ள நபர்கள் மட்டுமே வசதியாக அமரமுடியும். தற்போது சுமார் 50 சதவீதம்பேரின் இடுப்பு அளவு 36 இஞ்சுக்கும் அதிகமாக உள்ளது. இதனால், பெரும்பாலானோர் பேருந்து இருக்கைகளில் வசதியாக அமரமுடியாமல் சிரமங்களுக்கிடையே பயணிக்கும் சூழல் உள்ளது.
குறிப்பாக, குறுந்தொலைவு மற்றும் நெடுந்தொலைவு செல்லும் பெரும்பாலான பேருந்துகளில் 2 இருக்கைகளுக்குப் பிறகு இடைவெளிவிட்டு 3 இருக்கைகள் என வரிசைக்கு 5 இருக்கைகள் அமைக்கப்படுவதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. அதேநேரத்தில், ஒரு வரிசையில் 2 இருக்கைகளுக்குப் பிறகு நடுவில் இடைவெளிவிட்டு மேலும் 2 இருக்கைகள் அமைக்கப்பட்டு வரிசைக்கு 4 பேர் மட்டும் அமரும் வகையில் உள்ள அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் சொகுசுப் பேருந்துகள் இதிலிருந்து வேறுபடுகின்றன.
பேருந்துகளில் இருக்கைகளை அகலப்படுத்த, பேருந்தின் அகலத்தையும் அதிகரிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய மோட்டார் வாகன தர சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்து, அவற்றின் அகலத்தை அதிகரிப்பது எளிது என்கின்றனர் போக்குவரத்துத் துறை அலுவலர்கள்.
பேருந்துகளில் வரிசைக்கு 5 இருக்கைகள் என்பதை 4-ஆக குறைத்து, இருக்கையின் அகலத்தை 15 அங்குலத்திலிருந்து 20 ஆக்க முடியும். இதனால், பயணிகள் வசதியாக அமர்ந்து செல்ல முடியும். மேலும், இருக்கைகளுக்கு இடையே நடத்துநர் சென்றுவர எளிதாகவும், நின்று பயணிப்போருக்கு காற்றோட்டமும் இருக்கும் என்கின்றனர் அவர்கள்.
கடந்தகாலத்தில் பேருந்தின் உயரமும், இருக்கையின் உயரமும் அளவோடு இருந்தன. தற்போது, பேருந்துகளின் உயரம் 11 அடியிலிருந்து 12 அடியாகவும், இருக்கைகளின் உயரம் 2 அடியிலிருந்து 2.5 அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பேருந்தின் அகலம் மட்டும் 8 அடியாகவே உள்ளது. இந்த 8 அடிக்குள் வரிசைக்கு 2 மற்றும் 3 என 5 இருக்கைகள் உள்ளன.
மேலும், முன் இருக்கைக்கும், பின் இருக்கைக்கும் உள்ள இடைவெளி மிகக் குறைவாக உள்ளது. இதனால், 3 பேர் அமரும் வகையில் உள்ள இருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் ஒரு பயணி வெளியே வர மற்ற இரு பயணிகளும் எழுந்து வழிவிட்டால் மட்டுமே சாத்தியமாகும். பேருந்துகளில் அதிக கூட்டம் உள்ளபோதும், அமர்ந்திருப்பவர்கள் உடல் பருமன் மிக்கவர்களாக இருக்கும்போதும் இது நடக்காத காரியம்.
நாட்டில் மோட்டார் வாகன தரச்சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டு, சிறுசிறு மாற்றங்களுடன் தொடர்ந்துவந்த நிலையில், கடைசியாக கடந்த 1988-89 ஆம் ஆண்டில் சற்றே திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டம் (விதிமுறைகள்) மட்டும் அரசுக்கு வருவாய் கிடைப்பதால் அடிக்கடி மாற்றம் செய்யப்படுகிறது. மோட்டார் வாகன தரச் சட்டம், நம் நாட்டு சாலைகள், தட்பவெப்பம், பண்பாடு, கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்படவில்லை என இந்தத் துறையில் பணியாற்றுவோரே தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக விதிகளை மீறி, கனரக வாகனங்களின் உயரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளின் உயரத்துக்கு இணையாக வேன்களின் உயரமும் உள்ளன. இதனால், சற்று பெரிய மேடு, பள்ளங்களிலோ அல்லது பெரிய திருப்பங்களிலோ செல்லும்போது எளிதாக கவிழ்ந்து அவை விபத்தில் சிக்குகின்றன.
எனவே, இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வுகாண மோட்டார் வாகன தரச் சட்டத்தை தற்போதைய காலத்துக்கு ஏற்ப மாற்றுவதும், பேருந்து இருக்கைகளின் அகலத்தை அதிகரிப்பதும் காலத்தின் கட்டாயம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அ. சௌந்தரராஜன் கூறியது: அரசுப் பேருந்துகளில் 2-2 என்ற வகையில் வரிசைக்கு 4 இருக்கைகள் அமைப்பதுதான் ஏற்றது. அதில் பயணிகள் வசதியாக பயணிக்க முடியும். நடத்துநர்கள் பணியாற்றுவதும் எளிதாக இருக்கும். மக்கள் வசதியை அரசு கருத்தில்கொள்வது அவசியம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.