திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு இன்று(டிச. 10) ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நிகழாண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
இதற்கு போதிய பாதுகாப்பை தமிழக காவல் துறையினர் அளிக்க வேண்டும் என கடந்த 1-ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி காா்த்திகை திருநாளன்று எந்தவித முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், மனுதாரர் ராம. ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரர் உள்பட 10 போ் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டார். அவர்களுக்குரிய பாதுகாப்பை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரா்கள் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மனுதாரரை மலையேற அனுமதிக்கவில்லை. இதனிடையே, இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், கடந்த 3-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற முடியாதது குறித்து சிஐஎஸ்எப் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாநகரக் காவல் துணை ஆணையர் விளக்கமளிக்க வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக தலைமைச் செயலர், காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநா் (ஏடிஜிபி) வருகிற 17- ஆம் தேதி காணொலி மூலம் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு இன்று(டிச. 10) ஆய்வு மேற்கொண்டனர்.
இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய ஆய்வு, தொடர்ந்து 3 மணி நேரமாக நடைபெற்றதாகவும், தேவையான தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.