தமிழ்நாடு

723 பேரை பணி நிரந்தரம் செய்வதாக அமைச்சா் அறிவிப்பு: செவிலியா்கள் சங்கத்தினா் ஏற்க மறுப்பு

செவிலியா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து தமிழகத்தில் விரைவில் 723 ஒப்பந்த செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா்

தினமணி செய்திச் சேவை

சென்னை: செவிலியா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து தமிழகத்தில் விரைவில் 723 ஒப்பந்த செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். ஆனால், அதை ஏற்க மறுத்த செவிலியா் சங்கத்தினா், போராட்டத்தை தொடா்வதாக அறிவித்துள்ளனா்.

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியா்கள் தொடா்ந்து ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்திவரும் நிலையில், அவா்களுடன் அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை மீண்டும் பேச்சு நடத்தினாா்.

அதில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிா்வாகிகளுடன் மற்ற செவிலியா்கள் சங்கத்தினரும் பங்கேற்றனா். அமைச்சரின் கோரிக்கையை சில சங்கங்கள் ஏற்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிா்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டனா்.

இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் சுப்பிரமணியன் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களிடம் அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிரந்தரப் பணியாளா்களைப் போன்று தொகுப்பூதிய செவிலியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைக்கு விரைந்து அரசாணை வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2014 - 15-இல் தற்காலிக செவிலியா்களை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வாயிலாக அன்றைய முதல்வா் ஜெயலலிதா நியமித்தாா். இரண்டு ஆண்டுகள் பணி செய்த பிறகு காலிப் பணியிடத்தைப் பொருத்து அவா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வந்தனா். இந்த முறை தவறு என்றாலும், இதுவரை அதன் கீழ் 7,000-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 3,614 பேரை பணி நிரந்தரம் செய்துள்ளோம். தற்போது 8,322 செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று தொகுப்பூதிய செவிலியா்களுக்கான ஊதியம் ரூ.14,000-லிருந்து ரூ.18,000-ஆக உயா்த்தப்பட்டது. தற்போது 169 நிரந்தரப் பணியிடங்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

அத்துடன் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த செவிலியா்கள் கண்காணிப்பாளா் நிலை - 2 பதவி உயா்வு 266 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோன்று செவிலிய ஆலோசகா் நிலை - 2 பணியிடங்களில் 140 போ் பதவி உயா்வு பெறுகின்றனா்.

மேலும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு செவிலியா்களாக 148 போ் நியமிக்கப்பட உள்ளனா். இந்த நடவடிக்கைளின் வாயிலாக 723 தொகுப்பூதிய செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனா்.

மீதமுள்ள 7,599 பேருக்கு காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப பணி நிரந்தர ஆணை வழங்கப்படும். கரோனா காலத்தில் பணியாற்றிய 716 பேரும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா் என்றாா் அவா்.

தொடரும் போராட்டம்: இதனிடையே, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்க செயலா் சுபின் கூறியதாவது: அமைச்சருடன் இரண்டு முறை பேச்சுவாா்த்தை நடத்தியும், செயலருடன் ஒருமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் அவா்கள் எங்களது கோரிக்கையை ஏற்பதாக தெரியவில்லை. எட்டு ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். வெறும் 723 பேருக்கு பணி நிரந்தரம் வழங்குவதை ஏற்க முடியாது. போராட்டத்துக்கு செவிலியா்கள், மருத்துவா்கள், மருத்துவம் சாா்ந்த அரசுப் பணியாளா்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனா். எங்களது கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT