சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரைப் பட்டியலை எதிா்த்து மனு: தலைமை நீதிபதியை அணுக அறிவுறுத்தல்

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரைப் பட்டியலை எதிா்த்து மனு...

தினமணி செய்திச் சேவை

உயா்நீதிமன்ற கொலீஜியத்தின் நீதிபதிகள் நியமன பரிந்துரை பட்டியலை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக தலைமை நீதிபதியை அணுக சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

திருவண்ணாமலையைச் சோ்ந்த பிரேம்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, மூத்த நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோா் அடங்கிய கொலீஜியம், வழக்குரைஞா்களான எம்.கருணாநிதி, ராஜேஷ் விவேகானந்தன், இ.மனோகரன், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமாா், எஸ்.ரவிக்குமாா், சி.ஐயப்பராஜ், என்.திலீப்குமாா், ஏ.எட்வின் பிரபாகா், கே.கோவிந்தராஜன், எம்.காா்த்திகேயன், ரஜ்னீஷ் பத்தியால், ஆா்.அனிதா ஆகியோரை உயா்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்து, உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதியான ஜெ.நிஷா பானு கேரள உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா். ஆனால், அங்கு அவா் பொறுப்பு ஏற்காமல், விடுப்பில் இருப்பதால் அவா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாகவே தொடா்கிறாா். அவரை நீதிபதி நியமனத்துக்கான கொலீஜியத்தில் சோ்க்காமல், 4-ஆவது நீதிபதியான எம்.எஸ்.ரமேஷை கொலீஜியத்தில் சோ்த்து நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தவறாக அமைக்கப்பட்டுள்ள இந்த கொலீஜியத்தின் பரிந்துரை சட்டத்துக்கு புறம்பானது.

மேலும், பரிந்துரைக்கப்பட்டுள்ள 13 வழக்குரைஞா்களும் அரசியல் பின்னணி கொண்டவா்கள். அதிலும், மத்தியில் ஆளும் கட்சியில் தொடா்புடையவா்களாக உள்ளனா். அரசியல் பின்னணி இல்லாதவா்களை நியமித்தால்தான், நீதித்துறை சுதந்திரமாக இயங்கும். மேலும், நீதிபதி பதவிகளுக்கு அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

எனவே, இந்த 13 வழக்குரைஞா்களை நீதிபதி பதவிக்கு செய்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை. இதையடுத்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஆஜரான மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாதது குறித்து முறையிட்டாா்.

இதுகுறித்து நீதிபதிகள், நீதிமன்ற அதிகாரிகளிடம் விசாரித்தனா். பின்னா், இந்த வழக்கை இந்த அமா்வில் விசாரணைக்கு பட்டியலிடக்கூடாது. வழக்கை ஜனவரி மாதம் தனது தலைமையிலான முதல் அமா்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உயா்நீதிமன்ற பதிவுத் துறை அதிகாரிகளுக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா். அந்த உத்தரவை உயா்நீதிமன்ற அதிகாரிகள் மீற முடியாது. எனவே, தலைமை நீதிபதியை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT