கரூர் பலி: கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளிடம் நடத்தப்பட்டு வந்த விசாரணை நிறைவடைந்தது.
தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளா் ஆனந்த், தோ்தல் தலைமைப் பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலாளா் நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலாளா் மதியழகன் ஆகியோரிடம் கடந்த மூன்று நாள்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இன்று பிற்பகலுடன் விசாரணை நிறைவடைந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“இன்றுடன் அனைத்து விசாரணையும் நிறைவடைந்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புரியவைக்க வேண்டிய இடத்தில் நாங்கள் இருப்பதால், மீண்டும் தேவைப்பட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக சிபிஐ காவல்துறையிடம் தெரிவித்துள்ளோம்.
41 பேர் மரணத்துக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எந்த விளக்கம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம். விசாரணை தொடர்பாகவும், நாங்கள் கொடுத்த தகவல் தொடர்பாகவும் தற்போது பொதுவெளியில் தெரிவிப்பது சரியாக இருக்காது. விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது சிபிஐ தெரிவிக்கும்.
எந்தெந்த இடத்தில் தமிழக அரசும், காவல்துறையும் தவறு செய்துள்ளது என்பதை தெரிவித்துள்ளோம். காவல்துறை பாதுகாப்பு மற்றும் உடற்கூராய்வில் உள்ள குளறுபடி, இந்த சம்பவம் நடைபெறாமல் காவல்துறை எங்கெல்லாம் தடுத்திருக்கலாம் போன்றவற்றை தெரிவித்துள்ளோம்.” எனத் தெரிவித்தார்.
விஜய்க்கு சம்மன் அனுப்பப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த நிர்மல் குமார், “யூகங்கள் அடிப்படையில் பதிலளிக்க முடியாது, எதுவாக இருந்தாலும் சட்டப்படி எதிர்கொள்வோம்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.