சென்னை: தில்லி சென்றுள்ள தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ரயில்வே, செய்தி மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தாா். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
இதுகுறித்து ஆளுநா் வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு:
மத்திய ரயில்வே செய்தி மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசித்தேன்.
கடந்த 2014 -ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் 1303 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2,242 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதுடன், 715 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், பயணிகளுக்கென அதிநவீன வசதிகளுடன் கூடிய 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழக மக்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காகவும், தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மீது அளவற்ற அன்பு செலுத்தி வருவதற்காகவும் பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.