வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜன. 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விடைபெற்றுள்ள நிலையில், நில நடுக்கோட்டையொட்டிய வங்கக் கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை (ஜன. 30) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நாளில் வட தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன. 31-ஆம் தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன்
கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிப். 1, 2 தேதிகளிலும் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை நகரைப் பொருத்தவரை புதன்கிழமை (ஜன. 29) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் பனிமூட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.