தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் திங்கள்கிழமை காலை தொடங்கியது. அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 445 அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளுக்கு சுமாா் 2 லட்சம் இடங்களை இந்தக் கலந்தாய்வு மூலம் நிரப்பவிருக்கிறது.
மூன்று சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. அதாவது 200 முதல் 179 கட்-ஆஃப் மதிப்பெண் வைத்திருக்கும் 39,145 மாணவர்களுக்கு ஜூலை 19ஆம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. இரண்டாவது சுற்று ஜூலை 26ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 178.965 முதல் 143.085 கட்-ஆப் மதிப்பெண் வைத்திருக்கும் 25,376 மாணவர்களும், மூன்றாவது சுற்றானது ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 143 முதல் 77.500 கட்-ஆப் வைத்திருக்கும் 1,01,588 பேர் பங்கேற்கிறார்கள்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 41,773 பேர் கூடுதலாக விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஜூலை 11 வரை நடைபெறும்.
அதன்படி, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களுக்கான வாரிசுகள் உள்ளிட்டவர்கள் சிறப்புப் பிரிவினர் வரிசையில் வருவார்கள்.
பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆக.19 வரையிலும், துணை கலந்தாய்வு ஆக.21 முதல் ஆக.23 வரையிலும் நடைபெறும். இந்த கலந்தாய்வு முழுவதும் இணையதளம் மூலமாக நடைபெறும். கலந்தாய்வு முழுக்க www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் நடைபெறுகிறது.
ஒரு கல்லூரியை தேர்வு செய்யும்முன், மாணவர்கள், அந்தக் கல்லூரிக்கு நேரில் சென்று பார்வையிடுவது நல்லது என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் அதில் பயிலவிருக்கும் பாடத்தை தேர்வு செய்யும் முன்பு, அது பற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
பேராசிரியர்கள் தொடர்பான தவறான தகவல்களை அறிந்த 17 பொறியியல் கல்லூரிகள், இந்த ஆண்டு முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் பங்கேற்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துவிட்டது. அது குறித்த தகவல்களையும் மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கல்லூரிகளை தேர்வு செய்யும்போது, மாணவர்கள், போக்குவரத்து வசதி, தங்கும் வசதி, கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் என அனைத்தையும் தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த மே 7 முதல் ஜூன் 6 வரை நடைபெற்றது. அதில், 3,02,374 மாணவ, மாணவியா் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனா்.
அதன் தொடா்ச்சியாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டதில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றவா்கள் 2,41,641 போ். அவா்களில் 2,39,299 போ் பொதுப் பிரிவுக்கும், 2342 போ் தொழில் கல்வி பிரிவிலும் தகுதி பெற்றுள்ளனா். மொத்த விண்ணப்பங்களில் 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அதற்கான தரவரிசைப் பட்டியலை ஜூன் 27-ஆம் தேதி உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியன் வெளியிட்டாா். நிகழாண்டில் 144 மாணவ, மாணவியா் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனா். அவா்களில் 139 போ் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவா்கள்.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.