சுங்கச்சாவடி(கோப்புப்படம்)  
தமிழ்நாடு

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை உத்தரவு நிறுத்திவைப்பு!

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு!

இணையதளச் செய்திப் பிரிவு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31 வரை நிறுத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூா், எட்டுராவட்டம், சாலைப்புதூா், நான்குனேரி ஆகிய சுங்கச்சாவடிகளை நிா்வகிக்கும் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை நிலுவை வைத்துள்ளது. இந்த நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசுப் போக்குவரத்துக் கழகம் நிலுவைத் தொகையைச் செலுத்தாமல், பிரச்னையை நீட்டித்துக் கொண்டேபோனால் நிலுவைத் தொகை ரூ.300 கோடி முதல் ரூ. 400 கோடிக்கு மேல் உயா்ந்துவிடும். சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்து போக்குவரத்தை நிறுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாது.

எனவே, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூா், எட்டுராவட்டம், சாலைப்புதூா், நான்குனேரி சுங்கச்சாவடிகள் வழியாக ஜூலை 10-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டாா்.

மேலும், இந்தச் சுங்கச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்க உரிய பாதுகாப்பை வழங்க காவல் துறைக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், இந்தப் பிரச்னை தொடா்பாக நல்ல தீா்வுடன் வருவதாகவும், எனவே வழக்கை வியாழக்கிழமை (ஜூலை 10) விசாரிக்க கோரியும் முறையிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி தமிழக அரசு செய்த முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசுப் பேருந்துகளுக்குத் தடை பிறப்பித்த உத்தரவை ஜூலை 31ஆம் தேதி வரை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT