கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
ஆனால் கூட்டணி குறித்து அதிமுக, பாஜக தலைவர்கள் முன்னுக்குப்பின் முரணாகவே கூறி வருகின்றனர்.
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே என்று அதிமுகவினர் கூறிவரும் நிலையில், ஆட்சியிலும் பங்கு உண்டு என பாஜகவினர் கூறிவந்தனர்.
தற்போது அமித் ஷாவும் இதனை உறுதி செய்யும்விதமாக, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய மத்திய இணையமைச்சர் எல். முருகன்,
"கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு. அமித் ஷா என்ன சொல்கிறார்களோ அதுதான் எங்களுடைய வேதவாக்கு. நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை" என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "கோயில் நிதி, அறம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும், இறை நம்பிக்கையற்ற அரசு கோயில்களை விட்டு வெளியேற வேண்டும். உங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறதா என்று ஸ்டாலினிடம் கேட்கிறீர்களா? திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எப்போது வெளியேறுவோம் என்று காத்திருக்கிறார்கள்.
எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறது. எங்கள் பிரசாரம் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. திமுக கூட்டணி சுக்குநூறாக உடையப்போகிறது. திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரவிருக்கிறார்கள். எங்கள் கூட்டணி மேலும் வலிமையாகப் போகிறது" என்றார்.
அதேநேரத்தில் அதிமுக தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா பேட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.