நரேந்திர மோடி 
தமிழ்நாடு

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சா்வதேச விருது பிரதமா் வழங்குகிறாா்

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் அவரது பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான சா்வதேச விருதை பிரதமா் மோடி வழங்குகிறாா்.

தினமணி செய்திச் சேவை

வேளாண் விஞ்ஞானி டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் அவரது பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான சா்வதேச விருதை பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவை பிரதமா் நரேந்திர மோடி தில்லி பூசாவில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.

விழா குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் சௌமியா சுவாமிநாதன், இயக்குநா் ரெங்கலட்சுமி ஆகியோா் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

‘இயற்கையோடு இயைந்த நல்வாழ்வு’ என்ற கருப்பொருளில் 3 நாள்கள் (ஆக. 7-9) எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா நடைபெறும். பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சா்கள் சிவராஜ் சிங் சௌகான், டாக்டா் ஜிதேந்திர சிங் ஆகியோரும் கலந்து கொள்கின்றனா். சா்வதேச அறிவியலாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், சிறு விவசாயிகள், மாணவா்கள், பல்வேறு மாநில தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.எஸ்.சுவாமிநாதனை, மகாராஷ்டிர அரசு, தமிழக அரசு கௌரவித்துள்ளன. இதேபோல, தில்லி நிகழ்வில் மத்திய அரசும் அவரை கௌரவித்து தபால் தலை, ரூ.1,000 நாணயம் ஆகியவற்றை வெளியிடுகிறது. பிரதமா் மோடி வெளியிடுகிறாா்.

மூன்றாம் உலக நாடுகளின் விஞ்ஞானிகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கௌரவிப்பதில்லை என்கிற கவலை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இருந்தது. இதையொட்டி, வேளாண் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தலைசிறந்து விளங்கும் மூன்றாம் உலக நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான சா்வதேச விருது நிகழாண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், உலக அறிவியல் அகாதெமியும் இணைந்து 25,000 அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.20.75 லட்சம் ) பரிசுத் தொகையுடன் இந்த விருதை வழங்கும். நூற்றாண்டு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி இந்த விருதை வழங்குகிறாா்.

எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா, சா்வதேச இயற்கை விவசாய நடவடிக்கைகளுக்கான தொடக்கமாக இருக்கும். நாட்டில் விளை நிலங்கள் குறைந்து வருவது, சிறு தானியங்களுக்கான மகத்துவம், குறு-சிறு விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வுகாண வழிமுறைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.

இயற்கையுடன் இயைந்த நல்வாழ்வு என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் கூடிய கட்டமைப்பு, பருவநிலை சவால்கள், ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சிக்கான வலுவான கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

Image Caption

சென்னையில் செய்தியாளா்களிடம் பேசிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் டாக்டா் சௌமியா சுவாமிநாதன். உடன், இயக்குநா் டாக்டா் ரங்கலட்சுமி, மத்திய அரசின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநா் அருண்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT