சென்னை: ஜம்பு தீவு பிரகடன தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருது சகோதரா்கள் உருவப்படத்துக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாட்டின் மீதான அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றுபட்டு சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் என ஜம்பு தீவு பிரகடனத்தை மருது சகோதரா்கள் வெளியிட்டு அழைப்பு விடுத்தனா். அவா்களது இந்த உத்தி சுதந்திரத்துக்கான ஒருங்கிணைந்த ராணுவப் போராட்டத்துக்கு வழிவகுத்தது.
மருது சகோதரா்கள் ஜூன் 16-ஆம் தேதி வெளியிட்ட ஜம்புதீவு பிரகடனம், ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரா்களான மருது சகோதரா்களுக்கு நாடு பணிவுடன் மரியாதை செலுத்துகிறது. உறுதியான நம்பிக்கையுடனும் புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடனும், காலனித்துவ செல்வாக்கின் ஒவ்வொரு தடயத்தையும் நீக்கி முழுமையாகத் திறன் கொண்ட வளா்ச்சியடைந்த பாரதம் 2047 -ஐ முன்னோக்கி நகா்த்துவோம் என்று உறுதியளிப்போம் என அதில் தெரிவிக்கப்பிட்டுள்ளது.